நுட்பத் துணுக்குகள்

பயனுள்ள நுட்பத் தகவல்கள் மற்றும் இணைப்புகள்
  • Vidque: காணொளிகளின் கதம்பம்

    இணையத்தில் காணொளிகளின் வியாபிப்பு மிகவும் வியக்கத்தக்கது. YouTube மற்றும் Vimeo போன்ற தளங்கள் மூலம் நாளாந்தம் பகிர்ந்து கொள்ளப்படுகின்ற காணொளிகளின் அளவு மிகவும் அதிகமானது. (ஒரு நிமிடத்திற்கு YouTube தளத்தில் மட்டும் 35 மணித்தியால காணொளிகள் இணைக்கப்படுகின்றன என்கிறது புள்ளிவிபரம்.) இவ்வாறு இணைக்கப்படும் காணொளிகளில் பொருத்தமான, தேவையான காணொளியை பெற்றுக் கொள்வது அவ்வளசு லேசுபட்ட காரியமல்ல. இந்த நிலையை இலகுவாக்கும் சாத்தியத்தை Vidque செய்கிறது. இதன் மூலம், காணொளிகளின் எண்ணிக்கையை விட அதன் தரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. தரம் எப்போதும் முக்கியமென்பதில் இருவேறு கருத்திருக்க வாய்ப்பில்லை தானே!

  • PDF கோப்புகளை இலகுவில் பார்வையிடல்

    PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்காக விசேடித்த செய்நிரல்கள் காணப்படுகின்றன. அதில் முதன்மையானது, Adobe நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும் Adobe Reader ஐச் சொல்லலாம். ஆனாலும், இந்தச் செய்நிரலானது, கணினியில் செயற்படுத்தப்பட்டதும் அது தொழிற்பட கொஞ்சம் நேரமெடுக்கும். இந்த நேரவிரயத்தை நீக்கி, வேகமாக PDF கோப்புகளை கணினியில் பார்வையிடுவதற்கான சாத்தியங்களை உண்டாக்கியுள்ள பல செய்நிரல்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் குறிப்பிடத்தக்கவை இரண்டாகும். Foxit Reader, Sumatra PDF என்பவையே அவையாகும். இவற்றில், Sumatra PDF மின்னல் வேகத்தில் Windows OS இல் இயங்குவதோடு, Adobe Reader இன் சில விஷேடித்த பண்புகளையும் தன்னகம் கொண்டுள்ளது. Sumatra என்றவுடன் உங்களுக்கு சுனாமி சிலவேளை ஞாபகம் வந்திருக்கலாம். Sumatra PDF வேகமாக இயங்குவதால், நேரத்தைக் கொஞ்சம் சேமிக்கலாம்.

  • ஜிமெயிலிற்கு எளிமையான இடைமுகம்

    இணைய அடிப்படையான செய்நிரல்கள் பல நாளாந்தம் எமது கருமங்களை சுலபமாகச் செய்ய உதவிக் கொண்டேயிருக்கின்றன. ஆனாலும், இணையச் செய்நிரல்களில் நாம் பயன்படுத்தாத சில விடயங்கள் கூட அதன் இடைமுகத்தில் தோற்றமளித்து, திரையின் இடத்தையும் எடுத்து சில நேரங்களில் தேவையில்லாத தாமதிப்புகளையும் உண்டு பண்ணும். ஜிமெயிலில் இவ்வாறு தேவையல்லாத விடயங்களை தவிர்த்து தேவையான விடயங்களோடு, அதன் இடைமுகத்தை எளிமையாகத் தோற்றச் செய்வதற்கான Chrome இணைய உலாவியில் தொழிற்படும் நீட்டிப்பொன்று வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. நீங்களும் இங்கு சென்று அந்த Minimalist Gmail என்ற extension ஐ உங்கள் Chrome இல் நிறுவுதன் மூலம் ஜிமெயிலின் இடைமுகத்தை எளிமையாக்கலாம்.

  • 2010: நுட்பங்களின் அறுசுவை

    கடந்த 2010 ஆம் ஆண்டு, தந்துவிட்ட தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் சாதனைகள், சவால்கள் என பல கோணங்களையும் கொண்டவை. பல இணையத்தளங்களும் நுட்பங்கள் சார்பான கடந்த வருடத்தின் போக்கைப் பற்றி, தங்கள் பார்வைகளை வெளியிட்டிருந்தது. அதில் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த Infographics என்னைக் கவர்ந்தது. இதேவேளை, New Scientist சஞ்சிகையின் தொழில்நுட்பம் சார்பான 2010 இன் பார்வையும் பல முக்கியமான விடயங்களை குறிப்பிட்டிருந்தது. அவர்களின் 2010 இன் முக்கிய 10 தொழில்நுட்ப விடயங்களின் தொகுப்பு இங்கேயிருக்கிறது. இதேவேளை, புதுநுட்பம் அன்பு வாசகர்களாகிய உங்களுக்கு எமது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வருடத்திலும் உங்கள் நுட்பங்கள் பற்றிய புரிதலை விரிவாக்குவதில் துணை நிற்போம் என்று கூறிக் கொள்கிறோம். பல புதிய விடயங்கள் புதுநுட்பத்தில் வரவிருக்கின்றது. புது வருட வாழ்த்துக்கள்.

  • தமிழ் குரோம் Transliterate extension

    அண்மைக்காலமாக அனைவரையும் கவர்ந்து வருகின்ற இணைய உலாவியாக Google Chrome உலாவியைச் சொல்ல முடியும். அதன் எளிமையான தோற்றம், வேகமான செயற்பாடு போன்றவை இதற்கு முதன்மையான காரணங்களாக இருக்கக்கூடும். Chrome உலாவியில் இயங்கும் தகவுள்ள பல உபயோகமுள்ள extensions நாளுக்கு நாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதேவேளை, இலகுவில் தமிழ் யுனிகோட் முறையில் தட்டச்சு செய்வதை சாத்தியமாக்கும் நிலையை Chrome browser இல் கொண்டுவர நான் ஒரு extension ஐ உருவாக்கியுள்ளேன். இந்த extension ஐ நீங்கள் உங்கள் Chrome உலாவியில் நிறுவி இலகுவில் தமிழில் தட்டச்சு செய்ய முடியும். தமிழ் குரோம் Transliterate என்ற extension ஐ install செய்ய Google Chrome Web Store இற்கு செல்ல வேண்டும். அதற்கான இணைப்பு இது. இந்த extension இயங்கும் முறையைச் சொல்லுவதாய் அமைந்த வீடியோ கீழே இணைத்துள்ளேன். உங்கள் எண்ணங்களை அழகு தமிழில் இலகுவாக இணையத்தில் பகிரலாமே!

முந்தைய முந்தைய துணுக்குகள்
Popular Posts and Tags

மின்னஞ்சலில் புதுநுட்பம்

உங்கள் மின்னஞ்சல் முகவரி:

Twitter இல் எங்களைத் தொடருங்கள். @puthunutpam

Dropbox: அறிந்ததும் அறியாததும்

Cloud Computing பற்றிய எண்ணக்கருவை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ, Cloud Computing உடன் தமது கருமங்களை நாளாந்தம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். Cloud Computing பற்றிய புரிதலை கொஞ்சம் விசாலமாக்குவதற்கு கீழ்வரும் காணொளியை அவதானமாகக் கவனியுங்கள்.

Cloud Computing பற்றிய உங்கள் ஐயங்கள் காணொளியைக் கண்டதும், தெளிவாய் பரிவர்த்தனை செய்யப்படலாம்.

இந்த Cloud Computing இன் பிரயோகங்களாக நாம் அன்றாடம் இணைய நிலைகளில் பாவிக்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், எமது கோப்புகளை இணையத்தில் சேமித்து தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் இலகுவில் பெற்றுக் கொள்ளும் வசதியைத் தருகின்ற Dropbox என்ற இணைய நிலைச் செய்நிரலும் Cloud Computing இன் பிரயோகமாகும்.

குறித்த Dropbox இன் மூலம் கோப்புகளை சேமித்து வைத்தல், பகிர்தல் என்ற செயற்பாடுகளைத் தாண்டியும் பல இன்னோரன்ன நன்மைகள் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றுள் சிலவற்றை நாம் இந்தப் பதிவில் காண்போம். கூடவே, இந்தச் செய்நிரலின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கோடு இதனோடு சேர்ந்து தொழிற்படும் பல செய்நிரல்களும் காணப்படுகின்றன. இவை Dropbox இன் API ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.

அடிப்படை விடயங்கள்

Dropbox ஐ பயன்படுத்தி உங்கள் கோப்புகளை இணைய நிலையில் சேமிக்க முடியும். Windows, Mac OS மற்றும் Linux போன்ற பணிசெயல்முறைமைகளில் இயங்கும் தகவுள்ள செய்நிரல்களையும் Dropbox கொண்டுள்ளதால், வேறுபட்ட OS பற்றிய கவலைகளே தேவையில்லை. அத்தோடு, அதன் இணைய இடைமுகத்தின் மூலம் எந்த இணைய உலாவியைப் (Browser) பயன்படுத்தியும் கோப்புகளை Dropbox கணக்கில் சேர்த்துக் கொள்ள முடிவது சுவை.

இந்த சேவையில் நீங்கள் இணைந்து கொண்டதும், உங்களுக்கு இலவசமாக 2GB அளவுள்ள சேமிப்பகம் வழங்கப்படும். அத்தோடு, இந்த அளவை நீங்கள் அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அதுவும் இலவசமாகத்தான். உங்கள் நண்பர்களை Dropbox இல் இணைய அழைப்பதன் மூலம், உங்கள் கணினியை உங்கள் கணக்குடன் இணைப்பதன் மூலம், புதிய கோப்புகளை உங்கள் கணக்கில் சேர்ப்பதன் மூலம் என இலவச சேமிப்புக் கொள்ளளவை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் ஏராளம். நண்பர்களை சேவைக்கு இணைப்பதன் மூலம் 8GB வரையான சேமிப்பு கொள்ளளவை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியுமென Dropbox இனிப்பான செய்தியும் சொல்கிறது.

அத்தோடு, உங்கள் கோப்புகளை நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளிலிருந்தும் (iPhone) உங்கள் கணக்கிற்கு இணைத்துக் கொள்ள முடியும். அத்தோடு, குறித்த கையடக்கத் தொலைபேசியிலிருந்தே உங்களின் கோப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

காற்றிலே கவிதை

உங்கள் நண்பரிடமிருந்து ஒரு கோப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் கொள்ளளவோ, மிகப் பெரியது. மின்னஞ்சலில் இணைத்து அனுப்ப முடியாது. இந்த நிலையில் என்ன செய்வீர்கள். அதற்கு இருக்கவே இருக்கிறது AirDropper என்கின்ற Dropbox உடன் சேர்ந்தியங்கும் செய்நிரல்.

இந்தச் சேவையைப் பயன்படுத்தி நீங்கள் குறித்த நண்பரிடம் கோப்பை பெறுவதற்கான தேவை அறிவிக்கலாம். அவரும் குறித்த செய்நிரல் அனுப்பிய இணைப்பின் மூலம் அந்த கோப்பினை உங்கள் கணக்கிற்கு சேர்க்கலாம். அவ்வளவுதான். உங்கள் Dropbox கணக்கில் உங்களுக்குத் தேவையான கோப்பு வந்து சேர்ந்துவிடும். கோப்பு சேர்க்கப்பட்ட செய்தியையும் இனிப்பான மின்னஞ்சலாக AirDropper அறிவிக்கும் என்பது கவிதை.

நீ காப்பாய்!

முக்கியமான கோப்புகளை காத்தல் என்பது எல்லோரும் அதிகம் சிரத்தை கொள்கின்ற விடயந்தான். குறிப்பாக எதிர்பாராத விதமாக கணினி கதிகலங்கிப் போய், செயலற்றுக் கிடக்கின்ற நிலையில், அதிலுள்ள கோப்புகளை பல நேரங்கள் மீள அப்படியே எடுத்துவிடுவது கடினமான காரியமாகும். நேரம் அதிகம் தேவைப்பட்ட வேலையும் கூட.

இப்படியான தருணங்கள் ஏற்படாமல், தடுக்க இறுவட்டுகள் (CD) மற்றும் USB Flash Drive களில் எமது முக்கியமான கோப்புகளை சேமித்து வைப்பது வழக்கமானது. இன்னும் சிலரோ மின்னஞ்சலில் குறித்த கோப்பை சேமித்து வைப்பர். ஆனால், மின்னஞ்சலில் காணப்படுகின்ற கோப்பின் அளவு மற்றும் பண்பு சார்பான வரையறைகள் எல்லா கோப்புகளை மின்னஞ்சலில் சேர்த்து விடுவதற்கு வழி கொடுப்பதில்லை. இதற்கான மிக அழகிய தீர்வு Dropbox தான். Dropbox ஐ நம்பியோர் drop ஆக்கப்படார்!

ஆசையில் ஓர் கடிதம்

சிலவேளைகளில், பெரியளவான கோப்புகளை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைப்பர். அவை மின்னஞ்சலின் சேமிப்பக கொள்ளவை அபகரித்துவிடும். ஆனாலும், அவர்கள் அனுப்பிய அந்த கோப்புகளை வெறுமனே அழித்து குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட முடியாது. இந்த நிலையில் என்ன செய்யலாம்.

MailDrop, உங்கள் உறவினர், நண்பர்களின் ஆசையான மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்ட பெரியளவான கோப்புகளை உங்கள் Dropbox கணக்கிற்கு தன்னியக்கமாகவே மாற்றிவிடும் காரியத்தை செய்துவிடுகிறது. இந்தச் செய்நிரலானது, Windows பணிசெயல் முறைமையில் மட்டுமே தற்போது இயங்குகிறது. ஆனாலும், ஏனைய பணிசெயல்முறைகளுக்கான பதிப்புகளும் வெளிவரும் வெகு தொலைவிலில்லை.

நீதான் என் தேசிய கீதம்

இணையத்தளத்தை உருவாக்குவது, அதனை இணையத்தில் இணைப்பது என்பதெல்லாம் ஒரு காலத்தில் மிகப்பெரிய விடயங்கள். ஆனால், காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சி எல்லாவற்றையும் ஓரளவிற்கு இலகுவாக்கியிருக்கிறது. வலைப்பதிவுகள் தொடங்க எண்ணிய மாத்திரத்திரலேயே, மிக இலகுவாக அதனை உருவாக்கி அவற்றில் உங்கள் கருத்துகளை சேர்த்துவிட முடியும். இதற்கு துணை புரியும் தளங்களாக, Blogger மற்றும் WordPress.com தளங்களை குறிப்பாகச் சொல்லலாம்.

ஆனாலும், நீங்கள் ஒவ்வொரு எழுத்தாக அழகு பார்த்து செய்த உங்கள் அழகிய HTML மூலம் செய்யப்பட்ட இணையத்தளம் இணையத்தில் எப்படியிருக்குமென பார்ப்ப வேண்டுமென்றால், குறித்த HTML கோப்புகளை இணையத்தில் எங்கே இலவசமாக சேர்க்கலாம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

இந்த விடயத்தை செய்வதை சாத்தியமாக்கும் பல சேவைகள் இணையப்பரப்பில் இருந்தாலும், உங்கள் Dropbox இன் Public Folder ஐ இணையத்தளத்தை சேமித்துவைப்பதற்கான இடமாகப் பயன்படுத்தலாம். Public URL ஐப் பெறுவதன் மூலம், உங்கள் இணையத்தளத்தை சாதாரண இணையத்தளமொன்றைப் போல், உலாவலாம். ஆச்சரியங்கள் தரும் சாத்தியங்களின் ஆரம்பம்தான் இந்த Dropbox. பரீட்சாத்தமாக இணையக் கோப்புகளை பரிசோதனை செய்ய உகந்த இடம்.

இங்கு HTML, JavaScript போன்ற இணைய நிலை மொழிகளை கோப்புகளில் பயன்படுத்த முடியும். ஆனாலும், PHP போன்ற மொழிகளைக் கொண்ட கோப்புகளுக்கான சாத்தியங்கள் Dropbox இல் இணையநிலை பாதுகாப்பு கருத்திற்கொண்டு Enable ஆக்கப்படவில்லை.

இதோ Dropbox இன் Public Folder இல் நான் இணைத்துள்ள மாதிரி HTML எளிய இணையப்பக்கத்தை காணலாம். இணைப்பு

இன்னும் பல சாத்தியங்கள் கொண்ட இந்த Dropbox இன் அழகிய நிலைகள் பற்றி ஆழமாகச் சொல்லவிருக்கிறேன். அதுவரையில், Dropbox சென்று உங்கள் கணக்கை உருவாக்கி, ஆனந்தம் பெருக.

பகிர்தல் பலன் தரும்

தொடர்புள்ள பதிவுகள்

எழுதியவர்

தாரிக் அஸீஸ், உதய தாரகை என்றே வலையுலகில் அறியப்பட்டவர். இவரால் நிறம் என்ற வலைப்பதிவு எழுதப்பட்டு வருகிறது. இவர் இணையத்தையும் கணினியையும் காதலிக்கிறார்.


பதிப்பித்தது: December 29th, 2010