By: slavik_V

இணையம்,சிறப்பானவை,தொழில்நுட்பம்

HTML5: அறிய வேண்டிய ஐந்து விடயங்கள்

19 Jan , 2011   தாரிக் அஸீஸ்  

எங்கு பார்த்தாலும், HTML5 பற்றிய பேச்சாகவே இருப்பதை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். “அந்த இணைய உலாவி அதற்கான வசதியை கொண்டிருக்கவில்லை, ஆனால், இந்த உலாவி கொண்டுள்ளது. இதுதான் சூப்பர் உலாவி” என்றெல்லாம் இணைய ஆர்வலர்கள் கதைப்பதைக் கேட்டிருப்பீர்கள். “இனி Video ஐ Play பண்ண Flash ஐ install பண்ணத் தேவையில்லையாமே! இப்ப HTML5 வந்திருக்காமே!” என்றும் மக்கள் சொல்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். சரி. அப்படியானால், HTML5 என்றால் என்ன?

HTML5 பற்றி நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய ஐந்து விடயங்களை நாம் விபரமாகப் பார்ப்போம். அதற்கு முன்னதாய், HTML என்றால் என்னவென்பது பற்றிய தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம்.

உயிரும் நீயே உறவும் நீயே

இணையத்தின் அழகிய நிலைக்கு ஆதாரமாய் இருப்பது HTML என்கின்ற HyperText Markup Language என்பது தான். ஒரு திரைப்படம் வெளிவந்தவுடன் அதனை ரசித்து பார்க்கிறோம். அதன் உருவாக்கத்தில் திரைக்குப் பின்னால் இருந்து வித்தைகள் செய்தவர்கள் பலர். அது போல, நீங்கள் இணைய உலாவியில் பார்க்கும் இணையப் பக்கமொன்று அழகுற தோற்றமளிக்க காரணமான பல நிலைகள் உண்டு. அதில் முதன்மையானது, HTML என்று விடலாம். இந்த இணைய மொழியைக் கொண்டே இணையப் பக்கத்தின் நிலைகள் உருவாக்கப்படுகின்றன.

இணையப்பக்கமொன்றை உருவாக்குவதற்கு அடிப்படையில், இந்த HTML பற்றிய அறிவு கட்டாயம் அவசியமானது. இதன் அடிப்படையிலிருந்தே இதர இணைய நிலை சார்ந்த மொழிகள் ஆட்சி செய்கிறது. அவைகள் பற்றியும் புதுநுட்பத்தில் சொல்லவிருக்கிறேன்.

ஆக, இணையப்பக்கத்தின் தோற்றம், அமைவு போன்றவற்றை நெறிப்படுத்தும் மொழியாக HTML ஐக் கண்டு கொள்ள முடியும். இனியென்ன, HTML5 ஐப் பற்றி பார்க்க வேண்டியது தான்.

HTML இன் பரிணாமத்தில் இறுதியாக வந்துள்ள அதன் பதிப்புதான் HTML5 என்பதாகும். ஒவ்வொரு பதிப்பிலும், புதிய பல குணாதியசங்களை அறிமுகப்படுத்தி வெளிவரும் HTML, இந்தந் தடைவை கொஞ்சம் அதிகமாகவே, பலரும் ஆச்சரியமாய் பார்க்கின்ற வகையிலான குணாதிசயங்களைக் கொண்டு வருகிறது.

இனி நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய HTML5 பற்றிய ஐந்து விடயங்களைப் பார்ப்போம்.

என்ன விலை அழகே!?

“பழைய இணைய உலாவிகள் இந்த HTML5 க்கு தங்களை தயார்படுத்தாத நிலையில், நான் இதனை எவ்வாறு பாவிக்க முடியும்?” என யாரும் கேட்பார்களானால், கேள்வியே மொத்தத்தில் பிழையானது. HTML5 என்பது ஒரு தனியான விடயமல்ல. பல தனியான குணாதிசயங்களின் தொகுப்பு என்று கூட சொல்லிவிடலாம். அதாவது, மொத்தமான HTML5 ஐ ஆளுகின்ற தகவுள்ள நிலையில், உலாவிகளை நீங்கள் காணாவிட்டாலும், அதன் குணாதிசயக்கூறுகளான நிலைகளின் ஆளுகின்ற தகவை உலாவியில் உறுதி செய்து கொள்ள முடியும்.

வெறும், அடையாள ஒட்டுக்கள் (tags) மற்றும் கோண அடைப்புகள் (angle brackets) என்பவற்றாலானதே HTML என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனாலும், HTML5 ஆனது, அதற்கும் மேலாக, Javascript ஊடாக DOM (Document Object Model) இடைத்தொடர்பாடல் செய்கிறது. இந்த ஏற்பாட்டால், HTML5 ஐப் பயன்படுத்தியே பல உன்னதமான இணைய நிலைச் செய்நிரல்களை உருவாக்க முடிவது அழகு.

ஓடும் தண்ணியிலே பாசியில்லையே!

நீங்கள் என்னதான் சொன்னாலும், நாம் இதுவரை பாவித்து வருகின்ற HTML 4 கூட அழகான இணையத்தின் அத்திவாரமாகத்தான் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. அதன் வெற்றியின் ஆர்வத்திலும், அடிப்படையிலும் உதிப்பதே இந்த HTML5. ஆக, புதிதாக ஒன்று வந்துவிட்டது என்பதற்காய் பழைய விடயங்களை மறந்துவிடவோ, எறிந்துவிடவோ தேவையில்லை. உங்கள் இணையச் செய்நிரல் HTML 4 இல் நேற்று செயற்பட்டதானால், இன்று அது HTML5 இல், செயற்பட்டே தீரும். அவ்வளவுதான்.

இந்த புதிய நிலை விடயங்கள், தொடர்ச்சியாக முன்னேறிக் கொண்டிருக்கின்ற தொழில்நுட்ப சாத்தியங்களை இணைய உலாவிகளுக்குள் இலகுவில் கொண்டுவருவதற்கான முயற்சி தான். இந்த முயற்சியின் வெற்றி கூட, என்றுமே இயங்கிக் கொண்டு, முன்னேறும் தொழில்நுட்ப அடைவுகளின் ஆதிக்கத்தினால் உருவானதே!

அழகு நிலவே, கதவைத் திறந்து அருகில் வாராயோ!

“இந்த HTML5 ஐ நான் எப்படி எனது இணையப் பக்கத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்?” என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். பொதுவாக HTML இன் பழைய பதிப்புகளில் எந்த Doctype ஐ பயன்படுத்துகிறோம் என குறித்துக் காட்டுவோம். சரியான doctype ஐ தெரிவது அவ்வளவு லேசுபட்ட காரியமுமில்லை. ஆனால், HTML5 இல், ஒரேயொரு doctype தான். அவ்வளவுதான்.

 

இப்படி doctype ஐ உங்கள் பழைய HTML கோப்புகளில் மாற்றிவிடுவதால் (இற்றைப்படுத்துவதால்), ஆகாயம் இடிந்து தலையில் விழாது. எல்லாமும் அம்சமாக இருக்கும். அழகு நிலவொன்று உங்கள் பக்கம் அன்பொளி பொழியும். உங்கள் இணையப் பக்கமும் எந்தக் கக்கிசமும் இல்லாமல் இனிதே தொழிற்படும். அத்தோடு, புதிய HTML5 இன் அழகிய நிலைகளை நீங்கள் சேர்க்கும் தகவு உண்டாகும்.

நீயொரு காதல் சங்கீதம்

நீங்கள் உருவாக்கின்ற இணையச் செய்நிரல்களில் canvas, video, audio, local storage போன்றவற்றை பயன்படுத்த நினைத்தால், இருக்கவேயிருக்கிறது HTML5. இன்றைய நிலையில் முன்னணி இணைய உலாவிகளான, Chrome, FireFox, Safari, Opera மற்றும் பல கையடக்கச் சாதனங்களின் உலாவிகள் என அனைத்தும் HTML5 ஐ தாங்கிக் கொள்ளும் நிலையில், பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமா, புதிய தொழில்நுட்பங்களை தங்கள் உலாவியில் இணைத்துக் கொள்வதை ஆதரிக்காத, அடம்பிடிக்கின்ற Microsoft கூட தங்களின் Internet Explorer 9 பதிப்பில், HTML5 இன் பல குணாதிசயங்களை ஆளும் தகவுள்ள நிலையை இணைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. இனியென்ன..?

HTML5 இன் மூலம் செய்யக்கூடிய வித்தைகள் ஒன்றிரண்டல்ல. அவை எண்ணிலடங்காதவை. இணைய எதிர்காலம் பற்றிய அழகிய கவிதையாய் HTML5 ஐ கண்டுகொள்ளவது தவிர்க்க முடியாததே! HTML5 இன் குணாதிசயங்களைக் குறிப்பதாய் அழகிய Infographics ஒன்று இணையத்தில் சக்கை போடு போட்டது. அதற்கான இணைப்பு இது. கட்டாயம் சென்று உங்கள் நுட்பங்கள் பற்றிய அறிவை பெருக்குங்கள்.

ஆடுவோம், பாடுவோம்..

1990 களின் ஆரம்பப்பகுதியில், டிம் பேர்னஸ்-லீ இணையத்தை கண்டுபிடித்ததன் பின்னர், அவராலேயே W3C என்கின்ற World Wide Web Consortium என்கின்ற இணைய அமையங்களை நிர்வாகம் செய்கின்ற அமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டது. 15 வருடங்களுக்கு மேலாக, அந்த அமைப்பு அதன் பணியை அழகுற செய்து கொண்டு வருகிறது. நேற்றைய தினம், HTML5 இற்கான இலட்சணையை இந்த அமைப்பு வெளியிட்டது.

இலட்சணையை வெளியிட பாவிக்கப்பட்டுள்ள இணையப்பக்கமும் கூட, மிக அழகாகவும், நேர்த்தியாகவும் HTML5 ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது அழகிய அனுபவம்.

சரி. அப்படியானால், இந்த HTML5 ஐக் கொண்டு பலப்படுத்தப்பட்ட இணையத்தளங்கள் உருவாக்கபட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். பல இணையத்தளங்கள் அழகிய நிலையில் உருவாக்கப்பட்டிருப்பது நீங்கள் அறிய வேண்டிய போனஸ் தகவல். இதோ சில இணைப்புகள் உங்களின் அழகிய அனுபவத்திற்காக.

இணையத்தில் இன்றே எதிர்காலத்தைக் கண்ட பூரிப்பு உங்களிடம் உருவாகிவிட்டதா?

 

பகிர்தல் பலன் தரும்Share on Facebook0Tweet about this on Twitter0Share on Google+0Email this to someone


பிரதி செவ்வாய் தோறும் நுட்பம் மடல் வெளியாகிறது.

நாம் உங்களுக்கு எந்த எரிதமும் அனுப்பமாட்டோம். உறுதியாக.
 • Dinesh M

  Arumaiyana thoguppu.. nandri…. Tamil – il padithal mattumae ennal mulumaiyaga purinthukolla mudigirathu… HTML 5 patriya oru siriya paada thokuppu veliyittal payanullathaga irukkum… neram irupin… :) Nandri….

  [Reply]

  Tharique Azeez Reply:

  காணொளிகளாக நுட்பங்கள் பற்றிய புரிதல்கள் வெளியாகி வருகின்றன. புதுநுட்பத்தோடு தொடர்ந்து இணைந்திருந்து புதிய விடயங்கள் தொடர்பான நிலைகளை இற்றைப்படுத்திக் கொள்ளுங்கள். நன்றி.

  [Reply]