Maryam_Mirzakhani_2014-08-12_18-14

ஆளுமை,கணிதம்

மர்யம் மிர்சஹானி: கணிதத்தில் உச்சம் தொட்ட பெண்மணி

15 Aug , 2014   தாரிக் அஸீஸ்  

“கணிதத்துறையில் நோபல் பரிசு” என இனங்காணப்படுவதுதான் 1936 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்ற பீல்ட்ஸ் பதக்கம் (Fields Medal) என்கின்ற விருது. ஈரானைச் சேர்ந்த கணிதவியலாளரான மர்யம் மிர்சஹானி, இந்த விருதினை வரலாற்றின் முதற்தடவையாக பெற்றுக் கொள்ளும் பெண்மணியாக உருவாகியுள்ளார்.

ஸ்டன்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரான மர்யம் மிர்சஹானி, கணிதவியலின் திரிகோண கணிதம் மற்றும் இயக்கநிலை தொகுதிகள் ஆகிய துறைகளிற்கு ஆற்றிய பங்களிப்பினை கௌரவிக்கும் பொருட்டு, இந்த உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

குவாண்டா என்ற சஞ்சிகைக்கு மர்யம் மிர்சஹானி வழங்கிய பேட்டியில், இளைய தலைமுறைக்கு உத்வேகம் தரக்கூடிய பல விடயங்களையும் தனது வாழ்வின் அழகிய சாதனை நினைவுகளையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வாழ்க்கையில் ஓர் உயரிய நிலையை அடைந்து கொள்ள வேண்டுமென்ற திடசங்கல்ப்பத்தை தனது, இளம் வயதிலேயே தனக்குள் மிர்சஹானி விதைத்துக் கொண்டார். சாதனைகள் செய்த சாதனையாளர்களின் வெற்றி வரலாறுகளையும் குறிப்புகளையும் தொடர்ச்சியாக வாசித்து, தானும் உலகம் பூராகச் சென்று, சாதனைகள் செய்ய வேண்டுமென்கின்ற எண்ணத்தை, தனது மனதிற்குள் இளம் பருவத்திலேயே உருவகித்து அதுவாகவே உருவாக உறுதி கொண்டார்.

வாழ்க்கையை வென்று, உலகின் மாற்றத்திற்கு துணையாக நின்ற, பெண் சாதனையாளர்களான, மேரி க்யூரி, ஹெலன் கெல்லர் போன்ற ஆளுமைகளை தனது கதாநாயகிகளாகக் கொண்டிருந்த மிர்சஹானி, தான் வளர்ந்து வந்து ஒரு தலைசிறந்த எழுத்தாளராக உருவெடுக்க வேண்டுமென விருப்பமும் நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

எழுத்தாளராக வேண்டுமென்கின்ற எண்ணம் என்பது, கணிதத்தில் தான் கொண்டிருந்த காதலை கண்டு கொண்ட போது, கரைந்து போனது. மிர்சஹானி, பள்ளியில், ஆசிரியரின் துணையோடு, தனக்கு கணிதத்தின் மீதுள்ள ஈர்ப்பை நன்றே புரிந்து கொண்டார். இப்படியாக தனது கணிதத்தின் மீதான காதல் நிலை, உயர் கல்லூரியில் படிக்கின்ற நிலையில், உச்சத்தை தொட்டிருந்தது.

ஈரானின், சர்வதேச கணித ஒலிம்பியாட்டில், கலந்து கொண்ட முதலாவது பெண்மணியாக இவர் அப்போது விளங்கினார். போட்டியில் கலந்து கொண்ட முதலாவது பெண்ணாக மட்டும் அவர் இருக்கவில்லை. அந்தப் போட்டியில் இரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக தங்கப்பதக்கங்களை வென்றார்.

இந்தப் போட்டியின் சவால்களே தனக்கு கணிதம் மீதிருந்த ஈடுபாட்டை மிக அதிகரிக்கச் செய்ததாகக் கூறும் மிர்சஹானி, கணிதத்தின் அழகை அனுபவிக்க, அதற்காக, கொஞ்சம் சக்தியையும் முயற்சியையும் வழங்க வேண்டுமென தனது கணிதம் மீதான அதீத ஆர்வத்தின் தொடர்ச்சியை விபரிக்கிறார்.

தான் விருது பெற்ற நிகழ்வானது, இளம் பெண் விஞ்ஞானிகளுக்கும் கணிதவியலாளர்களுக்கும் உத்வேகத்தை வழங்குமாயின், அதுவே தனக்கு அதீத மகிழ்ச்சியைத் தருமென, விருது பெற்றதன் பின்னர் வழங்கிய செவ்வியொன்றில் மிர்சஹானி தெரிவித்துள்ளார்.

தன்னைப் போலவே, எதிர்காலத்தில் இன்னும் பல சாதனைகளை பெண்கள் நிகழ்த்துவார்கள் என்ற உயர் நம்பிக்கை கொண்டுள்ள மிர்சஹானி, அறிவியல் துறையில் பெண்களின் பங்களிப்பின் பெறுமதியை இன்னுமொரு தடவை உணர்த்திச் செல்கின்றார். தமது சாதனைகள் வழியாக, வளருகின்ற தலைமுறைக்கு உத்வேகம் தருகின்ற எவரும் போற்றுதற்குரியவர்களே!

பகிர்தல் பலன் தரும்Share on Facebook0Tweet about this on Twitter0Share on Google+0Email this to someone


பிரதி செவ்வாய் தோறும் நுட்பம் மடல் வெளியாகிறது.

நாம் உங்களுக்கு எந்த எரிதமும் அனுப்பமாட்டோம். உறுதியாக.